உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதி கிராமங்களுக்கு, பாசன வசதி தரும் திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தொட்டிப்பாலம், ஆசியாவில் மிக நீளமானதாக அமையும், என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உசிலம்பட்டி பகுதியில் 58 கிராமங்களைச் சேர்ந்த 33 கண்மாய்கள் மூலம், 2,285 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், 58 கிராம கால்வாய் திட்டப் பணிகள், 74.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து கால்வாய் வெட்ட பட்டு, உத்தப்பநாயக்கனூர் அருகே இரண்டு கிளைக்கால்வாய் களாக பிரிக்கப்பட்டு, கண்மாய் களை இணைக்கும் கால் வாய்கள் வெட்டும் பணி முடியும் தருவாயிலுள்ளது. 27.2 கி.மீ., நீளமான பிரதான கால்வாயில் 3 இடங்களில் தொட்டிப்பாலங்கள் அமைகின்றன. சந்தையூர் கண்மாய் அருகே 250 மீ., நீளம் கொண்ட தொட்டிப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது குன்னத்துப் பட்டி அருகிலும், மேலஅச்சணம்பட்டி அருகிலும் தொட்டிப்பாலங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. குன்னத்துப்பட்டியில் பிரதான கால்வாயின் 1.3 கி.மீ., நீளத்திற்கும் தரையில் இருந்து சுமார்
6 மீட்டர் உயரத்திலும் தொட்டிப்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றது.
ஆசியாவின் நீளமான தொட்டிப்பாலம் : இதே போல் மேலஅச்சணம் பட்டி அருகே 1.4 கி.மீ., நீளத்திற்கு தொட்டிப் பாலம் அமைக்கப்படுகின்றது. இந்த பாலம் தரையில் இருந்து அதிகபட்சமாக 18 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது. தண்ணீர் வரக்கூடிய தொட்டிப்பாலத்தின் அகலம் 2.5 மீ., நீளம் 1.30 மீ., உயரம் 1.80 மீ. வினாடிக்கு 316 கனஅடி நீர் வரும் பாலமாகவும் இதுஅமையும். இந்த பாலம் முழுமைபெறும் போது ஆசியாவில் மிக நீளமான தொட்டிப்பாலமாக இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply