பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் திட்டம் தற்போது அமல்படுத்தப்படாது என்று மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
இந்த விஷயத்தில் அனைத்துத் தரப்பினரிடமும் விவாதித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிறகே முடிவு எடுப்போம் என்றும் அவர் கூறினார்.
மேலும் மாநில பாடத் திட்டத்தைப் பொருத்த வரை பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதா – வேண்டாமா என்பது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்தைப் பொருத்தது என்றும் அவர் கூறினார்.
கல்வி துறையைச் சீரமைக்க யஷ்பால் குழு பரிந்துரையின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை அமைச்சர் கபில் சிபல் அண்மையில் வெளியிட்டார். அதில் ஒன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் திட்டம்.
இதற்கு சில மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஏனெனில் கல்வி மத்திய – மாநில அரசுகளின் அதிகார வரம்பில் உள்ளது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு ரத்து தற்போது இல்லை என்ற வகையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
கல்வி முறையைச் சீரமைக்க வேண்டியது அவசியம். அது எதிர்காலத்தில் மிகவும் பயனிக்க கூடியதாகும். பொது மக்களின் ஆதரவு இல்லாவிட்டால் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. சில திட்டங்கள் நடைமுறைக்கு ஒத்து வராது என்று கருத்தில் உண்மை இருந்தால் அவற்றை கைவிடுவதில் தயக்கம் இல்லை என்றார் அவர்.
கல்வி துறையைச் சீரமைக்கும் பரிந்துரைகள் மீது பொது விவாதம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். ஒருமித்த கருத்து இல்லை என்றால் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது என்றார் கபில்.
கல்வி சீரமைப்புத் திட்டங்களை வெளியிடும் முன்பு அது குறித்து பிரதமரிடம் ஆலோசித்தீர்களா என்று கேட்டபோது, கல்வியைச் சீரமைக்க உகந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் என்னிடம் கூறியுள்ளார் என்றார் அவர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து அமல்படுத்தப்படும். அதுவும் கூட இந்த ஆண்டில் அமலுக்கு வராது.
ஆனால் மாநில அரசுகளைப் பொருத்தவரை அந்தந்த மாநிலங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மாநில அரசு பாடத் திட்டங்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்று நான் கூறியதாகக் கருதினால் அவர்கள் எனது அறிவிப்பை முறையாகப் படிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்றார் கபில்.
மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு வழங்கும் முறையை விரைவில் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நான் அறிவித்த பரிந்துரைகளில் சில, யோசனைகள் ஆகும். வேறு சில முடிவுகள். சிலவற்றுக்கு சட்டத் திருத்தம் தேவைப்படும் என்றார் அவர்.
கல்வி சீரமைப்புத் திட்டங்களை கிராம அளவில் அமல்படுத்துவது மிகவும் சிரமமாகும். இவற்றை அமல்படுத்த மாநில அரசுகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்களின் ஒத்துழைப்பு தேவை. எல்லோரும் ஒத்துழைத்தால்தான் இதை நடைமுறைப்படுத்த முடியும் என்றார் அவர்.
அன்னிய கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், அன்னிய கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு அளிக்க அரசு நிர்பந்திக்குமா என்று கேட்டபோது, அது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார். பிளஸ் டூ அளவில் நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டம் அமல்படுத்தப்படுமா என்று கேட்டபோது, அவ்வாறு நான் கூறவில்லையே என்றார் அவர்.
Leave a Reply