மீண்டும் டாடா வசம் ஏர் இந்தியா?!

08-air-india-boeing-747200டெல்லி: அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிர்வாகம் மீண்டும் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

77 ஆண்டுகளுக்கு முன் 1932-ல் ஜேஆர்டி டாடாவால் ஆரம்பிக்கப்பட்டது ஏர் இந்தியா.

பின்னர் இந்த நிறுவனத்தை அரசுடைமையாக்கினர். அப்போது உள்நாட்டு சேவைக்கு இந்தியன் ஏர்லைன்ஸும், வெளிநாட்டு சேவைக்கு ஏர் இந்தியாவும் செயல்பட்டன.

பின்னர் அல்லயன்ஸ், இந்தியா ஒன் என குழப்பங்களைச் செய்து, ஏர் இந்தியாவையும், இந்தியன் ஏர்லைன்ஸையும் ஒன்றாக்கினர். ஒன்றான பின்னர் இன்னும் குழப்பம், நஷ்டம் அதிகரித்ததே தவிரி சேவை மேம்படவில்லை, நிறுவனமும் உருப்படவில்லை.

கிட்டத்தட்ட மூடுவிழாவுக்குத் தயாராகும் சூழலில் ஏர் இந்தியாவைத் தள்ளிய அதன் அதிகாரிகள், இப்போது புதிய யோசனையாக, மீண்டும் ஏர் இந்தியாவின் நிர்வாகத்தை டாடா குழுமத்திடம் ஒப்படைக்கும் யோசனையைக் கூறியுள்ளனர்.

ஏர் இந்தியா இயக்குநர் குழுவுக்கு ரத்தன் டாடாவை தலைவராக்கி, புதிய நிர்வாகத்தைக் கொண்டு வரும் திட்டத்தை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் முன் வைத்துள்ளார்.

ஆனால், அதை நேரடியாக சொல்லாமல் ஏர் இந்தியாவை சீரமைக்கும் யோசனைகளை டாடாவிடம் கேட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படேல்.

1980 வரை ஏர் இந்தியாவின் செயலற்ற தலைவராக இருந்தவர்தான் ரத்தன் டாடா. இப்போது ஒருவழியாக மீண்டும் அவர்களிடமே ஏர் இந்தியாவை ஒப்படைக்கத் தயாராகிவிட்டது மத்திய அரசு.

தினமணி நாளிதழ் முன்பு சொன்னது போல, ‘அரசு என்ற தனியான அமைப்பு எதற்கு… பேசாமல் அதையும் தனியார் முதலாளிகளிடம் காண்டிராக்டில் விட்டுவிடலாம்’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *