தமிழகத்தில் பல இடங்களில் குண்டுவெடிக்கும்’ என்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு இமெயிலில் மிரட்டல் அனுப்பப்பட்ட இன்டர்நெட் மையத்துக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு, 2 நாட்களுக்கு முன்பு ஒரு இமெயில் வந்தது. அதில், ‘சென்னை விமான நிலையம், துறைமுகம் மற்றும் தமிழகத்தின் பல முக்கிய இடங்களை குண்டு வைத்து தகர்க்கப் போகிறோம். முடிந்தால் என்னை பிடித்துக் கொள்ளவும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரிக்க சைபர் கிரைம் உதவி கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இ மெயிலில் ஜெயசீலன் என்ற பெயரும், அவரது செல்போன் நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெயசீலன் சேலத்தை சேர்ந்தவர் என்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். சேலம் சென்று ஜெயசீலனை பிடித்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.
சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள சந்தூஸ் இன்டர்நெட் மையத்தில் இருந்து மிரட்டல் இ மெயில் அனுப்பப்பட்டதை தனிப்படையினர் கண்டுபிடித்தனர். ஜெயசீலனை அந்த இன்டர்நெட் மையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் மிரட்டல் இ மெயிலுக்கும் ஜெயசீலனுக்கும் தொடர்பில்லை என்பது தெரிய வந்தது.
ஜெயசீலன் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரால் பாதிக்கப்பட்ட யாரோ ஜெயசீலன் பெயரில் மிரட்டல் இ மெயில் அனுப்பியது தெரிய வந்தது. அதன்பின், இன்டர்நெட் மையத்துக்கு வந்தவர்களின் வருகைப் பதிவை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் முயன்றனர். ஆனால், இன்டர்நெட் மையத்துக்கு வருபவர்களின் விவரங்கள், கண்காணிப்பு கேமரா போன்றவை அங்கு இல்லை.
இதனால், இந்த மையத்தின் லைசென்சை தி.நகர் போலீசார் ரத்து செய்து, பூட்டி சீல் வைத்தனர். சென்னையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்டர்நெட் மையங்களிலும் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். விதிமுறைகளை மீறிய மையங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Leave a Reply