தனியார் பள்ளிகளின் கட்டண வசூலுக்கு கிடுக்கிப்பிடி: 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்

posted in: கல்வி | 0

tblarasiyalnews_97376215458சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் புதிய சட்டத்தை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். “தனியார் பள்ளிகளில் கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனைத்து வகைகளிலும், பள்ளிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டதாக இக்குழு இருக்கும் என்றும், குழுவின் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் விசாரணை நடத்தி குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டால், சம்பந்தபட்டவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தனியார் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளுக்கு சிறிதும் பொருந்தாத வகையில், சிறப்புக் கட்டணம், கல்விக் கட்டணம், காலமுறைக் கட்டணம் போன்றவற்றின் பெயரில் மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பல்வேறு தலைப்புகளில் கட்டணங்களை நிர்ணயிப்பதில், தனியார் பள்ளிகளால் ஒரு சீரான நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

அதனால், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கும், அத்துடன் தொடர்புடைய இதர செயல்பாடுகளுக்காகவும் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “2009ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் சட்டம் (கட்டணங் களை முறைப்படுத்துதல்)’ என இது அழைக்கப்படும். தனியார் பள்ளிகளில் எந்த வகுப்பாக இருந்தாலும், எந்தப் பாடப் பிரிவாக இருந்தாலும், அதில் சேர்ப்பதற்கான கட்டணத்தை தீர்மானிக்கும் நோக்கத்திற்காக குழு ஒன்று அமைக்கப்படும்.

ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஒருவரை, குழுவின் தலைவராக தமிழக அரசு நியமிக்கும். அதில், பள்ளிக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், பொதுப்பணித் துறை இணை தலைமை பொறியாளர் (கட்டடம்) ஆகிய நான்கு பேர் உறுப்பினர்களாகவும், பள்ளிக் கல்வித்துறை கூடுதல் செயலர், குழுவின் உறுப்பினர்-செயலராகவும் இருப்பார். குழுவின் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

* தனியார் பள்ளியின் இட அமைப்பு, பள்ளியின் உள்கட்டமைப்பு, நிர்வாகம் மற்றும் செலவினம், தனியார் பள்ளியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தேவைப்படும் நியாயமான அதிகபட்ச நிதி, குறிப்பிடப்படும் பிற கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிக்கான கட்டணங் களை குழு நிர்ணயிக்கும்.

* குழுவின் முடிவு பள்ளிக்கு தெரிவிக்கப்பட்டதும், அதிருப்தி இருந்தால் 15 நாட்களுக்குள் குழு முன் ஆஜராகி தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதை குழு பரிசீலனை செய்து, 30 நாட்களுக்குள் தனது உத்தரவை பிறப்பிக்கும்.

* குழுவின் உத்தரவு, மூன்று கல்வியாண்டுகளுக்கு தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதாக இருக்கும். மூன்றாண்டு கால இறுதியில், மீண்டும் உத்தரவு பெறுவதற்கான விண்ணப் பத்தை தனியார் பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

* குழு தீர்மானிக்கும் அல்லது அரசினால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பது தொடர் பாக புகார் வந்தால், குழு விசாரணை நடத்தும். விசாரணை நடத்தி, பள்ளியைப் பொறுத்து (அரசு பள்ளி தொடர்பான புகார் இருந்தால்) அரசு நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரையை குழு அனுப்பும்.

* குழுத் தலைவர், பள்ளி ஆய்வுக்குச் செல்லும்போது, பள்ளியின் அனைத்து கணக்கு புத்தகங்களையும் குழுவின் பார்வைக்கு வைக்க வேண்டும். கட்டணம் அதிகமாக வசூலித்தது உண்மை தான் என்று குழு முடிவு எடுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு குழு பரிந்துரை செய்யும்.

* உரிமையியல் நடைமுறை தொகுப்பு சட்டத்தின்படி, ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் கொண்டதாக இக்குழு இருக்கும். சாட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை நடத்தப்படும். இந்த சட்டத்தின்படி, விதிமுறைகளை மீறுபவர்கள் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டால், மூன்றாண்டுகள் முதல் அதிகபட்சமாக ஏழாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்குவதோடு, 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

* புதிய சட்டத்தின் படி, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர், மாணவர்களிடம் இருந்து கூடுதலாக எவ்வளவு தொகை வசூலித்தாரோ, அந்த தொகையை திருப்பி அளிக்க வேண்டும். இவ்வாறு சட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *