புதுடில்லி: மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் யு.பி.எஸ்.சி., மற்றும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் உள்ளிட்ட தேர்வு எழுத ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணம் வசூல் செய்யும்முறையிலிருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்கும் படி மத்திய நிர்வாகத்துறை அமைச்சகம், பணியாளர் தேர்வு வாரியங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பணியாளர் தேர்வுத் துறை இனி வேலை வாய்ப்பு குறித்து விளம்பரம் அளிக்கும் போது, பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது, என்பதை குறிப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும், பணியாளர் தேர்வு குழுவில் நிச்சயம் பெண்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும், மத்திய நிர்வாகத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது மத்திய அரசு பணியில் 7.52 சதவீத பெண்கள் உள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 15 முதல் 20 சதவீதம் வரை உயர வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். சிவில் சர்வீஸ் பணிகளில் தற்போது 24 சதவீதம் பெண்கள் உள்ளனர். கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு பணியாளர்கள் உள்ளனர்; அவர்களில் எத்தனை பேர் பெண்கள் என்ற விவரத்தை அளிக்கும் படி மத்திய அரசு அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply