சென்னை: தமிழக அரசின் மொத்த கடன் தொகை ரூ. 74,456 கோடி என்று நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நிதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் கூறுகையில்,
மாநிலத்தின் சமூகநல திட்டங்களால் ஒருபக்கம் செலவு அதிகரிக்கிறது.
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதால், அரசு ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை ரூ. 11,093 கோடி வழங்க வேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 5,156 கோடி தொடர் செலவு ஏற்படும். இந்த ஆண்டுக்கு மட்டும் ஊதிய உயர்வு காரணமாக, சுமார் ரூ. 7,500 கோடி கூடுதல் செலவும், சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான ஒட்டுமொத்த செலவு ரூ. 30,647 கோடியாகவும் இருக்கும். இது மாநிலத்தின் மொத்த வருவாய் செலவில் 52 சதவீதம் ஆகும்.
2008-2009ம் ஆண்டில் உணவு மானியம் ரூ. 1,950 கோடியாக இருந்தது. இப்போது, இது ரூ. 2,800 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கான மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீட்டுத் திட்டங்களுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ. 2,080 கோடி செலவு ஏற்படும்.
கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் மாநில அரசின் கடன் ரூ. 74,456 கோடி. இது 2000-2001ம் நிதியாண்டில் ஆட்சியிலிருந்து திமுக விலகியபோது, ரூ. 28,685 கோடியாக இருந்தது.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அதிமுக ஆட்சியில் இருந்து விலகியபோது, அவர்கள் வைத்துச் சென்ற கடன் தொகை ரூ. 57,457 கோடி. அதற்கு அடுத்த ஆண்டு ரூ. 60,170 கோடி என கடன் தொகை உயர்ந்து கொண்டே வருகிறது.
நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.
தமிழகத்தில் கடந்த மூன்றாண்டு காலத்தில் நிதித் துறை செம்மையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மொத்த வருமானத்தில், 3 சதவீதம் அளவுக்கு நிதி பற்றாக்குறை பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வரையிலும் மூன்று சதவீதம் அளவிலேதான் தமிழகத்தின் நிதி பற்றாக்குறை இருக்கிறது. ஆனால், வருங்காலத்தில் சற்று அதிகமாகலாம்.
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் நிதி நிலைமை சற்று கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் வருவாய் வளர்ச்சி சரிந்து வருகிறது. மறுபக்கத்தில் செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. மாநிலத்தின் சொந்த வரி வருவாயில், குறிப்பாக வணிக வரிகள் மற்றும் முத்திரைத்தாள் தீர்வைகளின் வளர்ச்சி விகிதம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
மத்திய வரியில் இருந்து பெறப்பட்ட மாநில அரசின் பங்கு முதலில் எதிர்பார்க்கப்பட்ட தொகையைவிட ரூ. 986 கோடி குறைந்துள்ளது. மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு வழங்குகிற நிதிப் பகிர்வு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வந்திருக்கிறது.
மூன்றாவது திட்டக் குழு காலத்தில் அது 7.48 சதவீதமாக இருந்தது. 12வது திட்ட காலத்தில் அது 5.31 சதவீதமாக குறைந்துவிட்டது என்றார் அன்பழகன்.
Leave a Reply