25 ஆண்டுக்குப் பின் கொச்சி-கொழும்பு கப்பல்!

posted in: மற்றவை | 0

27-ship200கொழும்பு: கொழும்புக்கும், கொச்சிக்கும் இடையே விரைவில் கப்பல் சேவை தொடங்கும் என்று இலங்கை போக்குவரத்து அமைச்சர் டல்லஸ் அழகப்பெருமா கூறியுள்ளார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கவுள்ளது.

இதுதொடர்பான முடிவு கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்ற சார்க் அமைப்பின் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்டது.

இந்த மாநாட்டில், இந்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் தலைமையிலான தூதுக் குழு கலந்து கொண்டது. இந்தக் குழு, இலங்கை போக்குவரத்து அமைச்சர் அழகப்பெருமாவுடன் பேசியது.

அதன் பின்னர் அழகப்பெருமா செய்தியாளர்களிடம் பேசுகையில், கொள்கை அளவில் கொச்சி- கொழும்பு கப்பல் சேவைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவு. கடந்த ஆண்டு நடந்த சார்க் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டின்போது இதுகுறித்து பேசப்பட்டது.

அப்போது இலங்கை அரசு விடுத்த கோரிக்கைக்கு இந்த ஆண்டு இசைவு தெரிவித்துள்ளது இந்தியா என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து 1985ம் ஆண்டுடன் நின்று போனது. அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வந்த சண்டையால் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது இயலாமல் போனது.

இந்த நிலையில், கொழும்பு – தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்குவது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டது. ஆனால் அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த யோசனை கைவிடப்பட்டது. தற்போது கொச்சியிலிருந்து கொழும்புக்கு கப்பல் விடப் போகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *