இஸ்லாமாபாத் : ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் அணு நீர்மூழ்கிக் கப்பலை இந்திய அரசு தயாரித்துள்ளது, இந்தப் பிராந்தியத்தின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் அணுநீர்மூழ்கிக் கப்பல், கடந்த 26ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் இதை துவக்கி வைத்தார். மொத்தம் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதன் ஒரு பகுதியாகவே இக்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் கூறியதாவது:அணுநீர்மூழ்கிக் கப்பலை இந்தியா தயாரித்துள்ளதன் மூலம், இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும். ஆனாலும், இந்தியாவுடன் ஆயுதப் போட்டியில் ஈடுபடாமல், பாகிஸ்தான் தங்கள் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சமநிலையை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.இவ்வாறு தகவல் தொடர்பாளர் கூறினார்.
Leave a Reply