தத்துப் பிள்ளைக்கு சகல சலுகையும் பொருந்தும்: ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

tblkutramnews_48521059752சென்னை: கிறிஸ்தவ தம்பதியினர் தத்தெடுத்த குழந்தைக்கு, அனைத்து சலுகைகளையும் ஏர்-இந்தியா நிறுவனம் வழங்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறார் பாதுகாப்புச் சட்டப்படி, குழந்தைகளை பெற்றோர் தத்தெடுக்க உரிமையுள்ளது

என்றும் ஐகோர்ட் கூறியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் ஜார்ஜ் கிறிஸ்டோர், கிறிஸ்டி சந்திரா. இவர்களில் ஒருவர் ஏர்-இந்தியா நிறுவனத்தில் பணிபுரிகிறார். இரண்டரை வயது பெண் குழந்தை தான்யாவின் பொறுப்பாளர்களாக தங்களை நியமிக்கக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். தத்தெடுத்து வளர்ப்பதற்காக சட்டப்பூர்வமாக தங்கள் வசம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இதை விசாரித்த ஐகோர்ட், தம்பதிக்கு அனுமதி வழங்கியது. அதன்பின், கிறிஸ்தவ மத முறைப்படி, குழந்தையை தத்தெடுத்தனர். தங்கள் குழந்தை தான்யாவுக்கு உரிய சலுகைகளை வழங்க வேண்டும் என ஏர்-இந்தியா நிறுவனத்திடம் விண்ணப்பித்தனர். சட்டப்பூர்வமாக குழந்தையை தத்தெடுக்காததால், அதற்கு சலுகைகள் வழங்க முடியாது என ஏர்-இந்தியா நிறுவனம் தெரிவித்தது. பின், சென்னை ஐகோர்ட்டில் ஜார்ஜ் கிறிஸ்டோபர், கிறிஸ்டி சந்திரா மனுத் தாக்கல் செய்தனர்.

தங்களுக்கு பிறந்த குழந்தை போல் தான்யாவுக்கும் அனைத்து சலுகைகளையும் ஏர்-இந்தியா வழங்க வேண்டும் என்றும் சட்டப்பூர்வமான உரிமைகளை பெற தான்யாவுக்கு உரிமை உள்ளது என்றும் அம்மனுவில் கோரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: கிறிஸ்துவ சட்டத்தில், தத்தெடுப்பதை முழுமையாக அங்கீகரிக்கவில்லை என, ஏர்-இந்தியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை. மனுதாரர்களுக்கு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சட்டம் பொருந்தும். குறிப்பிட்ட நாட்டின் சிவில் சட்டம் அனுமதித்தால், ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சட்டம் தத்தெடுப்புக்கு வழிவகுக்கிறது. குழந்தையின் பொறுப்பாளர் என்ற உரிமையை கோர்ட் மூலம் மனுதாரர்கள் பெற்றுள்ளனர். அதன் பின், குழந்தையை தத்தெடுக்க தேவையான சடங்குகளை செய்துள்ளனர்.

எனவே, ஏர்-இந்தியா நிறுவனம் எடுத்த நிலைப்பாடு, சட்டப்படி செல்லாது. குழந்தைகளை தத்தெடுப்பதை ஊக்குவிப்பதற்குப் பதில், மனுதாரர்கள் பொறுப்பாளர்கள் மட்டும் தான் என்றும் தத்து குழந்தை சலுகை பெற முடியாது என்றும் ஒரு பொதுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியா நிறுவனம் கூறுகிறது. இது ஒரு போலித்தனமான வாதம். சர்வதேச பொறுப்புகளையும், அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட குறிக்கோளையும் அடைவதற்காக சிறார் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையை தத்தெடுக்க பெற்றோர் விரும்பினால், சிறார் பாதுகாப்புச் சட்டப்படி குழந்தைகளை தத்தெடுக்க உரிமை உள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, இரண்டரை வயது பெண் குழந்தையான தான்யாவை ஏர்-இந்தியா அதிகாரி அங்கீகரிக்க வேண்டும். ஏர் இந்தியா நிறுவன ஊழியரின் குழந்தைக்கு வழங்கப்படும் சலுகைகள் போல், அனைத்து சலுகைகளையும் தான்யாவுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *