டெல்லி: எத்தனை பாடங்கள் கற்றாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் லாபத்தில் இயங்கும் அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் முரட்டுப் பிடிவாதம் காட்டி வருகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு.
இன்னும் சில மாதங்களுக்குள் நவரத்னா எனப்படும் லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் மும்முரம் காட்டி வருகிறது மத்திய அரசு.
இந்தப் பங்கு விற்பனையின் மூலமந் ரூ.25000 கோடியைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.
அரசுத் துறை நிறுவனங்களில் இருக்கும் குறைபாடுகளைக் களைவதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க தனியார் மயமாக்குவதற்கான முயற்களில் இறங்குவது பொருளாதாரச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
பொருளாதாரம் வீழ்ச்சியடையும் தருணங்களில் இந்த அரசுத் துறை நிறுவனங்கள்தான் தடுப்புச் சுவர்போல இருந்து காக்கும் தன்மை கொண்டவை என்றும், பொருளாதார மந்த காலத்தில் மக்கள் நலன் சார்ந்து இயங்க தனியார் நிறுவனங்கள் முன் வராத நிலையில், அரசு நிறுவனங்களே மக்களுக்கு துணை நிற்கும் என்பதால், அவற்றை லாப நோக்கில் மட்டும் இயங்கும் அமைப்புகளாக மாற்றுவதைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனாலும், இதற்கு செவி கொடுக்கும் மனநிலையில் அரசும் ஆட்சியாளர்களும் இல்லை. முதல் கட்டமாக நவரத்னா நிறுவனங்களின் ஒரு பகுதி பங்குகளை ரூ.12000 கோடிக்கு விற்கப் போவதாக, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
இப்போது அதற்கான பூர்வாங்கப் பணிகளை மத்திய நிதி அமைச்சகம் ஆரம்பித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply