மெட்ரிக் பள்ளிகளுக்கு டிசம்பரில் புது கட்டண விகிதம்

posted in: கல்வி | 0

tblarasiyalnews_45079767705தனியார் பள்ளிகள் கட்டணம் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டப் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. முதற்கட்டமாக, தனியார் பள்ளிகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை சேகரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

“”அரசு நிர்ணயிக்கும் குழு, அடுத்த கல்வியாண்டுக்கான புதிய கட்டணத்தை, வரும் டிசம்பருக்குள் நிர்ணயித்துவிடும்,” என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சட்டசபை கூட்டத்தொடரில், தனியார் பள்ளிகளின் கட்டணங்களை ஒழுங்குமுறை படுத்துவதற்காக புது சட்டம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும், அக்குழுவினர், மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து, புதிய கட்டணங்களை நிர்ணயிப்பர் என்றும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழு நிர்ணயிக்கும் கட்டணங்களை மீறி வசூலித்தாலோ, குழுவின் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டாலோ, விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகி குற்றவாளி என முடிவானால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிப்பதற்கும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதை அமல்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் தற்போது துவங்கியுள்ளன.

முதல் கட்டமாக, தனியார் பள்ளிகளில் வகுப்புவாரியாக தற்போது வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை சேகரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தெந்த இனங்களில், எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற விவரங்களை, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர். குழு அமைக்கப்பட்ட பின், தனியார் பள்ளிகள் தற்போது வசூலிக்கும் கட்டண விவரங்கள் குறித்த பட்டியல் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “”குழு அமைக்கும் பணிகள், புதிய கட்டணம் நிர்ணயிப்பு தொடர்பான ஆய்வுப் பணிகள் அனைத்தும், ஐந்து அல்லது ஆறு மாதங்களில் முடிந்துவிடும். வரும் டிசம்பருக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து, புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுவிடும். அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்கு, நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே புதிய கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். கட்டண விவகாரத்தில் விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

பள்ளிகளில் கட்டண விவரங்களை அதிகாரிகள் கேட்கும்போது, குறைத்துக் கூறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், கட்டண இனங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கூறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, பள்ளிகள் வசூலிக்கும் உண்மையான கட்டண விவரங்களை பெறுவதற்கு, பெற்றோர்களிடமும் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *