கோவை: கோவையைச் சேர்ந்த 16 வயதான கார்னிகா யஷ்வந்த், தனது இளம் வயதிலேயே சாதனை மனிதராக உருவெடுத்துள்ளார்.
ஐதராபாத்தில் தற்போது வசித்து வரும் கார்னிகா யஷ்வந்த், பள்ளியில் படிக்கும் போதே வெப் மற்றும் சாப்ட்வேர் தொழில் நுட்பங்களை சுயமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். பள்ளியில் படித்துக் கொண்டே சாப்ட்வேர் தொடர்பான கம்பெனியை ஆரம்பித்து வருவாய் ஈட்டத் துவங்கினார்.
தனது 15வது வயதில், அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் இருந்து ஆன்-லைன் மூலமாக தகவல் தொழில் நுட்பத்தில் பட்டம் பெற்றார். 120க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் தொழில் நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். இன்டர்நெட்டில் செயல்படும் பல்வேறு அமைப்புகளின் கேள்விகளுக்கு பதிலளித்து, பலரது சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகிறார்.
கார்னிகா யஷ்வந்த் தனது 16வது வயதில், வெப் மற்றும் மல்டி மீடியா துறையில், “இஎன்எஸ்’ என்ற கம்பெனியை துவக்கி இளம் தொழில் முனைவோராக உருவெடுத்துள்ளார். இந்த நிறுவனம் வெப் வடிவமைப்பு, வெப் மேம்பாடு, ஆன்-லைன் விளம்பரம், ஆன்-லைன் மார்க்கெட்டிங் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சேவைகளை அளித்து வருகிறது.
இந்த நிறுவனத்துக்கு பல நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன. புதிய தலைமுறை வெப்சைட் தொழில் நுட்பத்தில் எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்வதிலும், பல நாடுகளில் தனது கிளைகளைத் துவக்குவதிலும் யஷ்வந்தின் நிறுவனம் தீவிரமாக உள்ளது.
சர்வதேச ஜூனியர் சேம்பர் கடந்த வாரம் நடத்திய, “வர்த்தகத்தில் சிறந்த மேம்பாடு மற்றும் தலைமைப் பண்பு’ என்ற தலைப்பிலான தேசிய அளவிலான மாநாட்டில் கார்னிகா யஷ்வந்த் பங்கேற்றார். இந்த மாநாட்டில் 18 வயது நிறைவடைந்த முதன்மை செயல் அலுவலர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
இருந்த போதும் சிறப்பு அனுமதி பெற்று இளம் தொழில்முனைவோரான 16 வயது யஷ்வந்த் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. கோவையில் உள்ள மூன்று ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஓட்டல் பார்க் பிளாசாவில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் சிறப்பு விருந்தினராக யஷ்வந்த் கலந்து கொண்டு, இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் துவக்க உரையாற்றினார்.
கார்னிகா யஷ்வந்த் இளம் வயதில் அபாரமான தொழில் நுட்ப அறிவுடன் தொழில் முனைவோராக சாதித்ததுடன், எழுத்தாளராகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது. தனது 14 வயதில் கவிதைகள், சிறுகதைகள் எழுதத் துவங்கினார். யஷ்வந்த் எழுதிய “உங்களது சிந்தனைகளை நினைத்து பார்’ என்ற புத்தகம் வரும் வாரத்தில் ஐதராபாத்தில் வெளியிடப்பட உள்ளது.
இது தவிர, “முன் சிந்தனைகள்’, “வாழ்க்கையில் முன்னேற 101 வழிகள்’ ஆகிய புத்தகங்களையும் எழுதி வருகிறார். கார்னிகா யஷ்வந்தின் தந்தை இளங்கோ, ஐதராபாத்தில் உள்ள கரூர் வைஸ்யா பாங்கில் முதன்மை மேலாளராக பணிபுரிகிறார்.
Leave a Reply