புதுடில்லி: சுதந்திர தினத்திற்கு முன்னதாக டில்லி உட்பட பல இடங்களில் தொடர் தாக்குதல்களை நடத்த, சதித் திட்டம் தீட்டிய ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் டில்லியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, டில்லி போலீஸ் இணை கமிஷனர் அகர்வால் கூறியதாவது: ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த, ஜாவித் அகமது மற்றும் ஆசிக் அலி என்ற இருவரை, டில்லி போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இவர்களில், அகமது என்பவன் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவன். அலி என்பவன் அந்த மாநிலத்தின் காதுவா பகுதியைச் சேர்ந்தவன்.
இவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சையது சலாகுதீனை, 2003ம் ஆண்டில் முதன் முறையாக சந்தித்தனர். அதன்பின் பல முறை சந்தித்துள்ளனர். சமீபத்தில் அவரை சந்தித்த போது, இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள போய் மற்றும் மான்சுரா முகாம்களில் இருவரும் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளனர். மத ரீதியான விஷயங்களும் அங்கு போதிக்கப்பட்டுள் ளன.
இவர்கள் இருவரும் டில்லி மகாவீர் வாடிகா பார்க்கிங் ஏரியாவுக்கு வெள்ளை நிற காரில் வந்த போது, போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து ஏகே-47 ரகத் துப்பாக்கிகள், இரண்டு கையெறி குண்டுகள், தோட்டாக்கள், பணம் மற் றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் வந்த காரின் பதிவு எண், அரியானாவில் ரேவாரி பகுதியில் பதிவான ஒரு ஸ்கூட்டருக்கு உரியது. சுதந்திர தினத்திற்கு முன்னதாக தொடர்ச்சியாக பல தாக்குதல்களை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
டில்லி, கோல்கட்டா அல்லது ஐதராபாத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்த அடுத்த சில மணி நேரங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அகர்வால் கூறினார்.
Leave a Reply