மதுரை: மதுரையில் கந்து வட்டி கும்பல்களின் பிடியில் சிக்கி மகளிர் குழுக்கள் தவிக்கின்றன. வட்டி கட்டியே பல குடும்பங்கள் சிதைகின்றன. சொந்தக் காலில் பெண்கள் நிற்க வேண்டும்; பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்; சுய தொழில்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவக்கப்பட்டன. அரசே இக்குழுக்களை ஆதரித்து, வங்கி கள் மூலம் கடன் வழங்கி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
வங்கிகளில் கடன் பெற வேண்டுமானால் ஒரு குழுவில் 12 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு குழுவை தொடர்ந்து நடத்தி இருக்க வேண்டும். அரசு தரும் பயிற்சிகளில் கலந்துகொண்டு இருக்க வேண்டும். அதன் பிறகு, என்ன தொழிலுக்கு தேவை எனக் குறிப்பிட்டு வங்கிகளில் கடன் பெற வேண்டும். ஒரு ஆண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட குழுக்கள், இந்த விதிமுறைப்படி செயல்பட்டன. இப்போது துவக்கப்படும் குழுக்களுக்கு, காத்திருந்து கடன் பெற விருப்பம் இல்லை. விரைவாக, குறுக்கு வழியில் எப்படி பணம் பெறலாம் என சிந்திக்க துவங்கி விட்டன. இதனாலேயே சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகின்றன.
உடனுக்குடன் பணம்: சமீப காலமாக மதுரையில் சில பெரிய நிறுவனங்கள் அலுவலகங்கள் அமைத்து, கந்து வட்டி தொழிலை துவக்கி உள்ளன. ஏற்கனவே செயல்படும் மகளிர் குழு உறுப்பினர்களை இந்நிறுவனங்களின்
பிரதிநிதிகள் சந்திக்கின்றனர். “”புதிய ஆட்களை வைத்து, புதிய குழுக்களை துவக்கினால் உடனுக்குடன் கடன் தருகிறோம். ஒரு உறுப்பினருக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மாதம் 640 ரூபாய் வீதம் 20 மாதங்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும். அதாவது, 10 ஆயிரம் ரூபாய் பெற்று, 12 ஆயிரத்து 500 திருப்பி செலுத்த வேண்டி வரும். குறைந்த வட்டிக்கு இவ்வளவு பணம் கிடைக்காது. ரேஷன் கார்டு ஜெராக்ஸ், 4 பாஸ்போர்ட் போட்டோ மட்டும் தந்தால் போதும்” என ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
கடன் பெற வேண்டுமானால் 12 பேருக்கு ஒரு பெண்ணை பொறுப்பாளியாக்குகின்றனர். பத்தாயிரம் ரூபாய் தரும்போதே ஆவணச் செலவு எனக் கூறி 750 ரூபாய் எடுக்கின்றனர். பொறுப்பாளியின் வீட்டுக்கு அனைத்து உறுப்பினர்களையும் வரச் சொல்லி, உடனுக்குடன் பணக் கட்டுகளை பட்டுவாடா செய்கின்றனர். மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை வாராவாரம் என பிரித்து வசூலிக்கின்றனர். ஏதாவது உறுப்பினர் தவணைத் தொகையை செலுத்த தவறினால், குழுவின் தலைவி தான் பொறுப்பு. பணம் செலுத்தாதவர்களுக்கு அனைத்துவிதமான இம்சைகளும் தேடி வரும். பயந்து தாலியை விற்று கூட கடனை அடைக்கும் நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். சிலர் “செக்ஸ்’ ரீதியான சித்திரவதைக்கும் ஆளாகின்றனர். சமீபகாலமாக இது போன்ற நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை மதுரையில் அதிகரிக்கிறது. இதனால் உண்மையான நோக்கத்துடன் துவக்கப்படும் குழுக்கள் பாதிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு நுகர்வோர் உரிமை மையங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.சுப்புராம் கூறும் போது, “”மதுரையில் தற்போது 18 ஆயிரம் குழுக்கள் இருக்கின்றன. 23 ஆயிரம் குழுக்கள் துவக்கப்பட வேண்டும் என்பது இந்த ஆண்டுஇலக்கு. கந்து வட்டி கும்பல்களின் ஆதிக்கத்தால் இலக்கை அடைவது சிரமம். மகளிர் திட்டம் மூலம் நடத்தப்படும் குழுக்களும், வங்கிகள் மூலம் பெறப்படும் கடன்கள் மட்டுமே செல்லும் எனவும் அரசு அறிவிக்க வேண்டும். இக்கும்பல்களின் கொடுமையை கட்டுப்படுத்துமாறு துணை முதல்வர், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன்,” என்றார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் நிறைவேற வேண்டுமானால் கந்து வட்டி கும்பல்களின் ஆதிக்கத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Leave a Reply