மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை: தமிழைக் கற்பிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து

posted in: கல்வி | 0

“மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், தமிழ் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். அப்படி, தமிழை கற்பிக்காத பள்ளிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி எச்சரித்துள்ளார்.

அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் கண்டிப்பாக தமிழ்ப் பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனினும், பல மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அரசின் உத்தரவை கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இதைத் தடுக்க, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு இயக்குனர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் 2006ன்படி, 2006-07ம் கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளும் தமிழ்மொழிப் பாடத்தை கட்டாயமாக முதல் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிப்படியாக கற்பிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் (2009-2010) முதல் நான்கு வகுப்புகளுக்கு தமிழ் தாய் மொழி அல்லாத மாணவர்கள் உட்பட அனைவருக்கும் தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும். தமிழ் மொழி அல்லாத பிற மாணவர்கள், தங்களின் தாய் மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாக கற்றுக்கொள்ளலாம்.

இச்சட்டம் முறையாக அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் நேரில் பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும். இதில், புகார் ஏதும் பெறப்படுமானால், அதற்கான பொறுப்பினை பள்ளி நிர்வாகமும், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளரும் ஏற்க நேரிடும். உரிய அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தபட்ட பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகாரிகள் மெத்தனமாக இல்லாமல், அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் கற்பிக்கப்படுகிறதா என்பதை மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக, மாதந்தோறும் 5ம் தேதிக்குள் மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *