பன்றிக்காய்ச்சல் பாதித்த சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனது ஏன் என்பது பற்றி, அவனுக்கு சிகிச்சை அளித்த சென்னையிலுள்ள மேத்தா மருத்துவமனை டாக்டர் பிரகலநாத் விளக்கினார்.
இதுகுறித்து டாக்டர் பிரகலநாத் நேற்று அளித்த பேட்டி:
சிறுவன் சஞ்சய்க்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு தொடர்ந்து இருந்து வந்துள்ளது. முதலில் 3 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. அதன் பின்னர் கடந்த 7ம் தேதி சஞ்சய்யை இங்கு அழைத்து வந்தனர். பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 8ம் தேதி சஞ்சய்யின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக கிண்டியில் உள்ள கிங் மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பினோம். அன்று மாலை வந்த பரிசோதனை முடிவில் சஞ்சய்க்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தெரிவித்தோம். அவர்கள் அந்த சிறுவனை அங்கேயே சிகிச்சை அளிக்குமாறு கூறினர்.
அதன்பின் சஞ்சயை தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தோம். சிறுவனின் உள்ளுறுப்புகளில் ரத்தக் கசிவு மற்றும் நாடித்துடிப்பு குறைந்து வந்தது. செயற்கை சுவாசம் பொருத்தி சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வந்தோம். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் சஞ்சய் நேற்று காலை 8.35 மணிக்கு பரிதாபமாக உயிர் இழந்தார்.
இவ்வாறு டாக்டர் பிரகலநாத் கூறினார்.
மருத்துவமனைக்கு வந்திருந்த தமிழகம், புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மண்டல இயக்குனர் பழனிவேல் கூறுகையில்,
‘‘பன்றிக்காய்ச்சல் நோய்க்கு சிறுவன் பலியாகியிருப்பது தமிழகத்தில் முதல் முறையாக நடந்துள்ளது. மேலும் இதுபோல் நடக்காமல் இருக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் நோய் இல்லை. தமிழகத்தில் இதுவரை 45 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவன் படித்த பள்ளியில் உள்ள சக மாணவர்கள், வசித்து வந்த பகுதியில் உள்ளவர்களுக்கு இந்நோய் குறித்த பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.
Leave a Reply