நியூயார்க் : அமெரிக்காவின் பல மாநில பள்ளிக்கூடங்களில் பாட புத்தகங்கள் மறைந்து “லேப்- டாப்’ மூலம் மாணவர்கள் “ஹோம் வொர்க்’ செய்யும் நிலைக்கு முன்னேறியுள்ளனர். உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் கம்ப்யூட்டர்கள் தற்போது கல்வி நிறுவனங்களையும்ஆக்ரமிக்க துவங்கி விட்டன.
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் கல்லூரி மட்டத்தில் மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டரை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கம்ப்யூட்டர் பயன்பாடு பள்ளிக்கூடம் வரைக்கும் வந்து விட்டது. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் பாட புத்தகங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. மாணவர்கள் ஆங்கிலம், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களை கம்ப்யூட்டர் மூலமே கற்று வருகின்றனர்.
இது குறித்து, இந்த மாநில பள்ளி ஆசிரியர்கள் குறிப்பிடுகையில், “பாட புத்தகங்களை விட கம்ப்யூட்டர் மூலம் படிப்பதை மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். பல்வேறு இடங்களில் திரட்டப்பட்ட பாடம் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை இன்டெர்நெட் மூலம் மாணவர்களுக்கு அளிக்கும் போது அவர்களுக்கு கூடுதல் தகவல் கிடைக்கிறது. வீட்டுப் பாடங்களையும் அவர்கள் லேப்-டாப் மூலமே செய்து முடித்து விடுகின்றனர். பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களையும் இன்டெர்நெட் மூலம் அவர்கள் தெளிவுபடுத்திக் கொள்கின்றனர். போரடிக்கும் நேரத்தில் தங்களிடம் உள்ள லேப்-டாப்பிலேயே வீடியோ கேம் விளையாடுகின்றனர்’ என்றார்.
கலிபோர்னியா மாநில கவர்னர் அர்னால்டு குறிப்பிடுகையில், “கம்ப்யூட்டர் மூலமான பாடத்திட்டத்தினால், பாட புத்தகங்களை அச்சிடும் செலவு கணிசமாக குறைகிறது. எனவே, என்னுடைய மாநிலத்திலும் அடுத்த கல்வியாண்டில் பாட புத்தகங்களை ஒதுக்கி விட்டு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் படிக்கும் திட்டத்தை புகுத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
இதே போல அமெரிக்காவின் பல மாநிலங்களும் உயர்நிலைப் பள்ளி அளவில் கம்ப்யூட்டர் மூலமான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளன.
Leave a Reply