சென்னையில் என்.எஸ்.ஜி. மையம்: ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்

posted in: மற்றவை | 0

pchidambaram-unveils-nsg-chennaiதேசியப் பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி.) மண்டல மையத்தை, சென்னை அசோக்நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

மும்பை தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்புத் தேவையைக் கருதி மத்திய அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது.

மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்த சமயத்தில் தலைமை அலுவலகத்திலிருந்து தேசியப் பாதுகாப்பு படை சென்றடைவதற்கு மிகவும் காலதாமதமானது. இதைக் கருத்தில் கொண்டு முதல்கட்டமாக மும்பை, சென்னை, ஹைதராபாத், கோல்கத்தா ஆகிய நான்கு இடங்களில் தேசியப் பாதுகாப்பு படையின் மண்டல மையங்களை ஜூன் 30-ம் தேதிக்குள் நிறுவ மத்திய அரசு முடிவெடுத்தது.

ஒவ்வொரு மண்டல மையத்திலும் தலா 241 கமாண்டோ வீரர்கள் இருப்பர். மானேஸர் தலைமை அலுவலகத்தில் போதிய அளவில் வீரர்கள் உள்ளனர். தேவை ஏற்பட்டால் வீரர்கள் அதிகரிக்கப்படுவர்.

சென்னையில் நெடுங்குன்றம் என்ற இடத்தில் தேசியப் பாதுகாப்பு படையின் மண்டல மையம் அமைப்பதற்கு மாநில அரசு 85 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருக்கிறது. இந்த மையத்தில் இருந்து 12 நிமிஷங்களில் மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றடைய முடியும்.

பெங்களூரில் ஏற்கெனவே ராணுவத்தின் சிறப்பு படை பிரிவு செயல்பட்டு வருகிறது. ஜோத்பூரில் ராணுவத்தின் சிறப்பு படை பிரிவும், குவஹாட்டியில் எல்லைப் பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எஃப்.) மையமும் அடுத்த மாதத்தில் தொடங்கப்படும்.

தேசியப் பாதுகாப்பு படை கமாண்டோ வீரர்கள் கர்நாடகம், கேரளம், ஆந்திரப் போலீஸக்கு பயிற்சி அளிப்பர்.

மெகா போலீஸ் திட்டத்தின்படி மாநிலங்களுக்கு ஹெலிகாப்டர் வழங்கப்படும். தேவையின்போது தேசியப் பாதுகாப்பு படையினர் அதைப் பயன்படுத்துவர்.

தேசியப் பாதுகாப்பு படைக்கு ராணுவத்தில் இருந்து 53 சதவீதம், துணை ராணுவப் படையில் இருந்து 47 சதவீதம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *