டில்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்த வீடுகள் மற்றும் உடைமைகள் இடிக்கப்பட்டுள்ள பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
தெற்கு டில்லியில் அமைந்துள்ள ஜன்ங்புரா என்ற இடத்தில் மதராஸி கேம்ப் என்ற பகுதி உள்ளது. 1978ம் ஆண்டு முதல் இங்கு 350க்கும் மேற்பட்ட தமிழர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடிசைவீடு, காரைவீடு மற்றும் ஓட்டு வீடு என அமைத்து மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு என பெற்று வசித்துவந்தனர்.மிகவும் பரிதாபகரமான நிலையில் இவர்கள் வாழ்க்கை இருந்து வரும் நிலையில், குடியிருக்கும் வீட்டைத் தவிர வேறு எந்த சொத்துக்களும் இவர்களுக்கு இல்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி, டில்லி நகரை அழகுபடுத்தும் நடவடிக்கையாகக் கூறி, வேறு எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்திடாமல், அனைத்து குடியிருப்புகளும் இடித்து தள்ளப்பட்டுவிட்டன.வேறு மாற்று இடம் இல்லாத நிலையில், வெயில், மழை என்று பாராமல் அங்கேயே வெட்டவெளி பொட்டலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருந்து வருகின்றனர். இது குறித்த செய்திகள் உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்தன.
இந்நிலையில், இப்பிரச்னையில் தலையிட்டு உதவிடும்படி தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தபோது முதல்வரை தென்காசி லோக்சபா தொகுதி எம்.பி., லிங்கம் நேரில் சந்தித்து இதுகுறித்த பிரச்னையை விளக்கி, மனுவையும் அளித்தார்.
அதில், ‘தமிழர்கள் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்தை மத்திய அரசு மற்றும் டில்லி மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ‘பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி அதே இடத்தில் அவர்களை குடியமர்த்திடவும், இல்லையெனில் மாநகராட்சி எல்லைக்குள் மாற்று ஏற்பாடுகள் செய்து தந்திட டில்லி மாநில அரசை வலியுறுத்த வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply