சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் குறுகிய கண்ணோட்டத்தில் செயல்பட்டு இரு மாநில மக்களுக்கும் இடையே நிலவி வரும் ஒற்றுமையை சிதைத்து விடக் கூடாது என்று கேரள அரசுக்கும், கேரள மக்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை 1895-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. மேற்கு நோக்கி பாயும் பெரியாறு நதியின் நீரை கிழக்கு நோக்கி திருப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை பிரிட்டிஷ் ராணுவ பொறியியல் குழுவினரால் காரை மற்றும் சுண்ணாம்புக் கலவையைக் கொண்ட திடமான கல்லினால் கட்டப்பட்டது. இந்தக் கட்டுமானத்திற்கான ஆயுள் 50 ஆண்டுகளுக்கு மேல் இல்லை என்று தெரிவித்து, முல்லைப் பெரியாறு அணை தன்னுடைய ஆயுள் காலத்தையும் மிஞ்சி இயங்கி வருகிறது என்ற கருத்தினை 1979-ம் ஆண்டு முதல் கேரள அரசு பரப்பிக் கொண்டிருக்கிறது.
கேரள அரசின் இந்தக் கூற்று, வல்லுநர்களின் துல்லியமான ஆய்வு நடத்தப்படாமல் தெரிவிக்கப்படும் ஆதாரமற்ற கருத்து ஆகும். இரண்டாம் நூற்றாண்டில் கல், களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்ட உலகத்திலேயே பழமை வாய்ந்ததாக கருதப்படும் புகழ்பெற்ற கல்லணை இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்பதை சுட்டிக்காட்டி, இதிலிருந்தே கேரள அரசின் கூற்று தவறானது என்பதை இந்தத் தருணத்தில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
தற்பொழுது கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு கீழே வெறும் 400 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. புதிய அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகும் கூட, தற்போது உள்ள பழைய நீர் தேக்கத்தில் தான் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். தற்போதுள்ள அணை பூகம்பம் ஏற்படக்கூடிய பலவீனமான பகுதியில் உள்ளது என்று கவலை தெரிவிக்கும் கேரள அரசு, அதே பலவீனமான பகுதியிலே தான் புதிய அணையை கட்டப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலுள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் தற்போதுள்ள பழைய முல்லைப் பெரியாறு அணையில் அமைந்துள்ள மதகுகள் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஆனால் புதிதாக கட்டப்படவிருக்கும் அணை கேரள மாநில அரசின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதே. தற்போதுள்ள பழைய முல்லைப் பெரியாறு அணை பயன்படுத்தப்படாத நிலை ஏற்பட்டால், ஏற்கனவே உள்ள 999 ஆண்டுக்கால ஒப்பந்தம் ரத்தாகிவிடும். அதாவது, பழைய ஒப்பந்தம் செயலிழந்து, கைவிடப்பட்ட நிலை ஏற்பட்டுவிடும். இதனால் தேசிய உணவு பாதுகாப்பிற்கு பெருமளவிற்கு பங்கை செலுத்தும் தமிழ்நாட்டின் ஐந்து வளமான மாவட்டங்கள் அடியோடு வறண்டு போய்விடும்.
நான் கேரள அரசை மனமார்ந்து கேட்டுக் கொள்வதெல்லாம், ஆதாரமற்ற, அச்சத்தின் காரணமாக, தமிழகத்தின் வளமான ஐந்து மாவட்டங்கள் வறண்டு போய் பாலைவனமாகி, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையை உருவாக்க வேண்டாம் என்பதே.
தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களும், பல ஆண்டுகளாக நல்ல நட்புறவுள்ள அண்டை மாநிலங்களாக இருந்து, இரு மாநில மக்களும் நமக்குள் நல்லுறவுடன் சமூக, கலாச்சார தொடர்புடையவர்களாக வாழ்ந்து வருகிறோம். தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளாகும்.
தமிழ் மொழி பேசும் லட்சக்கணக்கான மக்கள் கேரளத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அதே மாதிரி மலையாளம் பேசும் லட்சக்கணக்கான கேரள மக்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். நீண்டகாலமாக இரு மாநில மக்களுக்குள் இருந்து வரும் ஒற்றுமையை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகி சிதைத்து விடக்கூடாது என்பதை எனது உளமார்ந்த வேண்டுகோளாக கேரள மக்களுக்கும், கேரள மாநில அரசுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
Leave a Reply