புதுடில்லி : குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகளில் சிக்கும், சுப்ரீம் கோர்ட்
மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் புதிய சட்ட திருத்த மசோதா நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது.
பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இம்மசோதாவை பார்லிமென்டில் சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி தாக்கல் செய்தார். இதன்படி, நீதிபதியாக பதவியேற்பவர்கள் பதவியேற்ற முப்பது நாட்களுக்குள் தங்களது மொத்த சொத்து விவரங்களையும் வெளியிட வேண்டும். நீதிபதிகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐந்து நபர் குழுவின் தலைவராக, சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி இருப்பார். இதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகியோருடன், ஜனாதிபதி மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆகியோரால் நியமிக்கப்படும் நபர்களும் உறுப்பினர்களாக இருப்பர். இதன்படி, முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் சிக்கும் நீதிபதிகளை பதவி விலகும்படி இக்குழு கேட்டுக் கொள்ளும். அப்படியும் பதவி விலகாத நீதிபதிகள், ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பின், பார்லிமென்டுக்கு இது பற்றி தெரியப்படுத்தப்படும். சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகளின் சொத்து விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply