வாழ்க வளமுடன்! – வேதாத்திரி மகரிஷி

posted in: Uncategorized | 0

வாழ்க வளமுடன்!வேதாத்திரி மகரிஷி

அரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்து, படித்து வளர்ந்தவர்களும், வாழ்ந்தவர்களும் உண்டு, நம் தேசத்தில். ஆனால், வீட்டுக்கு வீடு மின்சாரம் வந்துவிட்டதும், குண்டு பல்புகளும், பிறகு டியூப்லைட்டுகளும் அலங்கரிக்கத் துவங்கின. இதையடுத்து சமீபமாக, இரண்டு விரல் அளவுக்குக் குச்சி பல்புகளும் கோலோச்சுவதற்கு வந்துவிட்டன.

அற்புதங்களால் நிறைந்தது இந்த உலகம். பச்சைப் பசேல் வயல்வெளிகள் நம்மைத் தாலாட்டும்; மஞ்சள் கலந்த வெயிலின் சூழல் நம்மை ஈர்க்கும்; கருமை நிற இருளும், உலகம் மொத்தத்துக்குமான ஒற்றைப் பௌர்ணமி நிலவும் நம்மைக் கிறங்கடிக்கும்.

மின்சாரம் வந்துவிட்ட காலகட்டத்தில், படிப்பதற்கு வசதியாக டேபிள் விளக்குகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. வீட்டில் உள்ள விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டு, பெற்றோர்களும் உடன்பிறந்தவர்களும் தூங்கிக்கொண்டிருக்க… ப்ளஸ் டூ படிக்கிற பையனோ பெண்ணோ நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு அருகில் ஒரு மேஜை இருக்கும்; அந்த மேஜையின் மீது ஒரு முழம் உயர அளவில், தெருவில் உள்ள மின்கம்பங்களைப் போல் சிறிய கம்பம் ஒன்றிருக்கும். அதன் உச்சியில் குண்டு பல்பு பொருத்தப்பட்டிருக்கும். அந்த பல்புக்குத் தொப்பி அணிவித்திருப்பதுபோல், கூடு ஒன்றும் இணைத்திருப்பார்கள். பல்பின் வெளிச்சமானது வேறெங்கும் பரவி, யாருக்கும் இடையூறு செய்யாதபடி, அந்தத் தொப்பி தடுத்தாட்கொள்ளும். பல்பு வெளிச்சம், மேஜைப் பரப்பின் மீது மட்டும் பரவியிருக்கும். அந்த இடத்தில் புத்தகத்தை விரித்து வைக்க… வெளிச்சம் புத்தகத்துக்குப் பரவி, எழுத்துக்களைக் கண்களுக்குக் காட்டும். இப்படியான ‘டேபிள் லேம்ப்’ வெளிச்சத்தில், விடிய விடியப் படித்து, உருவேற்றிக் கொண்டு, பரீட்சை எழுதி, வெற்றி பெற்று… பின்னாளில் அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் பதவி வகித்தவர்கள் நிறையப்பேரை அறிவேன். அவர்கள் தங்களை நம்முடைய உலக சமுதாய சேவா சங்கத்தில் இணைத்துக் கொண்டும் சேவையாற்றியுள்ளனர்.

அரிக்கேன் விளக்கில் படித்தவர்கள், தெரு விளக்கில் படித்தவர்கள், டேபிள் விளக்கில் படித்தவர்கள் என வளர்ந்த காலகட்டமெல்லாம் முடிந்துவிட்டது போலும்! இன்றைக்கு வெளிச்சத்தை விதம் விதமாகக் கக்குகிற விளக்குகளெல்லாம் தயாரிக்கப்பட்டுவிட்டன. வீடுகள் பலவற்றிலும் அந்த விளக்குகள் பொருத்தப்பட்டு கன ஜோராகக் கண்ணைப் பறிக்கும் அளவுக்கு வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டு இருக்கின்றன.
இந்த விளக்குகளால் பலவித நன்மைகள் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் சில தருணங்களில், இதுபோன்ற விளக்குகளும் வெளிச்சங்களும்தான் நம் கண்களைப் பதம் பார்க்கவும் செய்கின்றன.

எனக்குத் தெரிந்து, அரிக்கேன் விளக்கில் படித்தவர்களுக்குக் கண்களில் எந்தப் பிரச்னையும் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில், ஐந்தாறு வயதே ஆன குழந்தைகள்கூட, மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்கிறேன்.

ஒருமுறை, காரைக்குடியில் இருந்து தங்களுடைய எட்டு வயது மகனுடன் பெற்றோர் வந்திருந்தனர். அவர்களின் முகங்களில் சோர்வும் அயர்ச்சியும் தெரிந்தன. அந்தப் பையன் வெளுத்துப்போன நிறத்தில், சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருந்தான்.

அந்தப் பையனின் அம்மாதான் பேச ஆரம்பித்தாள்… ”எப்பப் பார்த்தாலும் டி.வி-யே கதியாக் கிடக்கறான், சுவாமி! கையில ரிமோட்டை வைச்சுக்கிட்டு, கண் கொட்டாம டி.வி-யையே பாத்துக்கிட்டிருக்கான். போதாக்குறைக்கு அதுல வீடியோ கேம்ஸ் வேற விளையாடிக்கிட்டு இருக்கான். சரியா சாப்பிடறதும் இல்லை; தூங்கறதும் கிடையாது. தினமும் கண்ணைக் கசக்கிக்கிட்டு, தூக்கம் வராம புரண்டு புரண்டு படுத்துக்கிட்டிருக்கான்.

ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனப்ப, அவங்கதான் கண்ணாடி போடணும்னு சொல்லிட்டாங்க. இந்தச் சின்ன வயசுல, சோடாபுட்டி கண்ணாடியோட அவனைப் பாக்கறதுக்கு பாவமா இருக்கு, சுவாமி!” என்று சொல்லிவிட்டு, அழத் துவங்கினாள் அந்தப் பெண்மணி.

வாழ்க வளமுடன்! – வேதாத்திரி மகரிஷி
நீண்ட நேரம் ஓரிடத்தில் உட்கார்ந்திருந்துவிட்டு, பிறகு எழுந்திருக்கும்போது என்ன செய்கிறோம்… இடுப்பை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக முறுக்கி, ஒடித்து, வளைத்து நிமிர்த்திக் கொள்கிறோம், அல்லவா? அசைவற்றுக் கிடந்ததால் மரத்துப் போய்விட்ட கால்களை நன்றாக உதறிக் கொள்கிறோம்தானே?! விரல்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் சற்றுநேரம் இருந்தாலே நரம்புகள் அயர்ச்சியாகி, கொஞ்சம் கனம் கூடினது போல் ஆகிவிடுகின்றன. பிறகு விரல்களுக்குச் சொடுக்கு எடுக்கும்போது, நமக்கு ஏற்படுகிற விடுதலையையும் நிம்மதியையும் சொல்லிப் புரியவைக்க வேண்டுமா என்ன?

அப்படித்தான் கண்களும்! நேருக்கு நேராக, ஒரே நேர்க்கோட்டில் டி.வி. அல்லது கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது, கண்களுக்கு அது சிக்கலைக் கொடுக்கும். பார்வையில் சின்னச் சின்னதாகக் கோளாறுகளை ஏற்படுத்தும். திடீரென கண்களில் இருந்து நீர் வெளியேறியபடி இருப்பதும், நாம் அடிக்கடி கண்களைக் கசக்கிக்கொண்டு இருப்பதும் அதனால்தான்!

அதேபோல், அதிக வெளிச்சங்களைப் பாய்ச்சி அடிக்கிற விளக்குகளை உற்றுக் கவனிப்பது கண்களுக்குத் தீங்கானது. ஒருகட்டத்தில், அந்த வெளிச்சங்கள் பார்வையையே பறிக்கிற அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

அந்தச் சிறுவனைப் பார்த்து, மெல்லியதாகச் சிரித்தேன். அவனுடைய சிரசைத் தடவி, ஆசீர்வதித்தேன். ”கண்ணாடியைக் கொஞ்சம் பார்த்துவிட்டுத் தரட்டுமா?” என்றேன். சட்டென்று அவனுடைய முகத்தில் சந்தோஷ மின்னல். அந்தக் கண்ணாடி அவனுக்கு பேரவஸ்தையாக இருப்பதை உணர்ந்தேன்.

அவனிடம், ‘என்ன… கண்ணாடி அணிவது உனக்குக் கஷ்டமா இருக்கா?’ என்றேன். அவன் தலையசைத்தான். ”ஆனா, என்ன செய்யறது? கண்ணாடி போட்டாத்தானே கண்ணு சரியாத் தெரியும்? அப்பத்தானே படிக்க முடியும்… விளையாட முடியும்?” என்றேன்.

இரண்டு நிமிட நேரம் மௌனமாக இருந்தவன், ”தாத்தா! கண்ணாடி போடுறது எனக்குக் கஷ்டமா இருக்கு. வேணும்னா இனிமே டி.வி. பாக்காம, வீடியோ கேம்ஸ் விளையாடாம இருக்கேன்” என்று சொல்லிவிட்டுத் தனது கண்களைக் கசக்கியபடி, அழத் துவங்கிவிட்டான்.

அவனை மெள்ள அணைத்துக் கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டு, ஆறுதலாகச் சிரித்தேன்.

”நான் செய்யறபடி நீயும் செய்யறியா? அப்படிச் செஞ்சா, இன்னும் கொஞ்ச நாள்ல கண்ணாடியே போடாம பாக்கலாம்; படிக்கலாம்; எழுதலாம். சரியா? நான் செய்யறதைச் சரியா செஞ்சா போதும்!” என்றேன்.

அந்தச் சிறுவன் ஆர்வத்துடன் தலையாட்டினான். மிகுந்த நம்பிக்கையுடன் சம்மதித்தான். அந்த நம்பிக்கை அவனுடைய கண்களிலும் மின்னின!

நான் செய்யச் செய்ய, அவனும் திருப்பிச் செய்தான். பின்னாளில், கண்ணாடி அணியும் நிலையில் இருந்து முழுவதுமாக விலகியிருந்தான் அந்தச் சிறுவன். அந்தப் பயிற்சியை உங்களுக்கும் சொல்லித்தரப் போகிறேன்.

நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்தானே?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *